Wednesday, 25 January 2017

பாரத மாதா கோயில் கட்டுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

குமரி அனந்தன் வலியுறுத்தல் 


திருவொற்றியூர்.ஜன.8: நீண்ட காலக் கோரிக்கையான பாரத மாதா கோயிலைக் கட்டுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். 
      தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்டுவது குறித்த விளக்கக் கூட்டம் திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது வர்த்தகர் சங்க கௌரவத் தலைவர் ஜி. வரதராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு பேசியது,  
    1923-ம் ஆண்டு ஜாதி, மத பேதமின்றி அனைவரும் பொதுவாக வழிபாடு நடத்த பாரத மாதா பெயரில் ஒரு கோயிலை கட்ட வேண்டும் என  முடிவெடுத்த சுதந்திர போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா தற்போதைய தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள  பாப்பாரப்பட்டியில் இடத்தைத் தேர்வு செய்து அதனை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுப்பிரமணிய சிவா இறந்து போய்விட்டார்.  தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அந்த இடத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. தியாகி சுப்பிரமணிய சிவாவின் கனவு நனவாகும் வகையில் அடிக்கல் நாட்டப்பட்ட அதே இடத்தில்  பாரத மாதா கோவில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி பாதயாத்திரை, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். சுமார் 40 வருட போராட்டத்திற்கும் பிறகும் தமிழக அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் 
வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், எந்த நோக்கத்திற்காக இடம் வாங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற 2 மாதங்களில் பாப்பாரபட்டியில் தமிழக அரசே பாரத மாதா கோயிலை கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் இல்லையெனில் கோயில் கட்ட விருப்பம் உள்ளவர்களிடம்  நிலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனாலும் தமிழக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தோம். இதில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு இதனால் மத ரீதியாக பிரச்னைகள் வாய்ப்புள்ளதாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 
   கருணாநிதி முதல்வராக இருந்தபோது பாப்பாரபட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் மட்டுமே கட்டினார். முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பாரத மாதா கோயிலை அமைக்க மனதளவில் ஒப்புக் கொண்டிருந்தார். இந்நிலையில் இக்கோயிலை உடனடியாக கட்டவோ அல்லது கட்ட விருப்பம் உள்ளவர்களிடம் ஒப்படைக்கவோ தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை வேண்டும். இது குறித்து விரைவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேச உள்ளேன் என்றார் அனந்தன். 
    இந்நிகழ்ச்சியில் சங்கத்  தலைவர் ராமசாமி, சென்னை பசுமை இயக்கத் தலைவர் துரைராஜ், வர்த்தகர் சங்க ஆலோசகர் காமாட்சி, பச்சையப்பன்,  தாணுலிங்கம், லட்சுமி ராஜாராம் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  

No comments:

Post a Comment