சிறப்புடன் நடைபெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்
திருவொற்றியூர், பிப்.22:பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனாய தியாகராஜர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லடச்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் மிக பழமையான கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனாய தியாகராஜர் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதற்கென அரசு மானியம் ரூ.80 லட்சமும், உபயதாரர்கள் மூலம் ரூ. 64 லட்சமும் நிதியுதவி பெறப்பட்டது. ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் நவீன வண்ணக் கலவைகள் மூலம் புதுப்பிக்கப்பட்டன. இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோயிலில் உள்ள அனைத்து மூல, உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் புதிய கலசங்கள் பொருத்தப்பட்டன.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை கும்பங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கோபுரங்களின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதற்கென சிறப்பு மேடைகள் அனைத்து கோபுரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து சரியாக காலை 7.32 மணிக்கு அனைத்து கோபுரக் கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை உரக்க எழுப்பினர். பின்னர் சிறப்பு உபகரணங்கள் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர் பீச்சியடிக்கப்பட்டது. அப்போது புனித நீரைப் பெற பக்தர்கள் முண்டியடித்தனர்.
மகா கும்பாபிஷேகத்தின் அனைத்து பூஜைகளையும் கபாலி சிவாச்சாரியார் தலைமையில் சுமார் 65 வேத விற்பன்னர்கள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, வடசென்னை எம்.பி. வெங்கடேஷ்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், அறநிலையத்துறை ஆணையர் தனபால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
கோயிலின் செயல் அதிகாரி என். லதா, சிறப்பு அதிகாரி ரகுநாதன் ஆகியோர் முன்னின்று கவனித்தனர்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:
மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நள்ளிரவு முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினர். அதிகாலைக்குள்ளாகவே கோயிலின் உள் பிரகாரம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியது. இதனையடுத்து தேரடி, வடக்கு மாட வீதி உள்ளிட்டவை, அருகாமையில் அமைந்துள்ள கட்டடங்களின் மாடிப்பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தன. கூட்டத்தைச் சமாளிக்க திருவொற்றியூர் பேருந்து முதல் எல்லையம்மன் கோயில்வரை பேருந்து போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சுமார் 15 இடங்களின் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இரண்டு இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகா கும்பாபிஷகத்தில் பங்கேற்றனர்.
எங்கு பார்த்தாலும் அன்னதானம், பிரசாதங்கள்:
மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான இடங்களில் அன்னதானம், பிரசாதங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. நாட்டுக் கோட்டை செட்டியார்கள், அம்மையப்பர் சேவா மையம், அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், உபயதாரர்கள் சார்பில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் கும்பாபிஷேகத்தைக் காண வந்த வெளியூர் பக்தர்கள் பயனடைந்தனர்.
முதல்நாளில் வந்து வழிபட்ட சசிகலா:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுவதை
நீண்ட நாள் வழக்கமாகக் கடைப்பிடித்து வந்தவர். மேலும் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா. தற்போது அவர் வெளியில் அதிகம் வருவதில்லை என்பதால் அவர் சார்பாக யாரேனும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஜெயலலிதாவின் தோழி சசிகலா திடீரென கோயிலுக்கு வந்தார். அப்போது சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் சிறிது நேரம் பங்கேற்ற சசிகலா கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பின்னர் திரும்பிச் சென்றார். மேலும் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் காமராஜ் வெள்ளிக்கிழமையே கோயிலுக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக திருவொற்றியூரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
No comments:
Post a Comment