Friday 19 May 2017

அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும்

தமிழருவி மணியன்

திருவொற்றியூர், மே 14:அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். மேலும் பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே பெற முடியும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
   திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் சிந்தனைச்சாரல் மாதாந்திர நிகழ்ச்சி திருவொற்றியூர் சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 'வாழ்க்கையெனும் ஜீவரசம்' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியது, 
   வாழ்க்கை என்பது பொதுவாகத் துன்பம் அதிகம் நிரம்பியதுதான். ஆனால் இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர துன்பத்தை எண்ணியே வருத்தமடைய முடியாது. பசி, நோய், பகை இல்லாத வாழக்கையில் அறம் சிறக்கும். 
   பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே நாம் பெற முடியும். திருக்குறள், திருமந்திரம்,  புறநானூறு, தேவாரம், திருவாசகம், புராணங்கள்ம, இதிகாசங்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறம் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை தொன்மையான தமிழ்மொழி வகுத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழர்களைப் பொறுத்தவரை அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும். இளம்வயதிலிருந்தே இவ்வாறு கற்பதை
பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். 
   தீமையின் நிழல்படாத அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். தீயவழியில் பொருளீட்டுவதையே ஒருவன் வழக்கமாகக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அப்பழக்கம் குணப்படுத்த முடியாத வியாதியைப் போல ஒட்டிக் கொள்ளும். பிறகு துன்பத்திலிருந்து அவன் விடுபடவே முடியாது என்பதை உணர வேண்டும். 
    எதனையும், யாரையும் அற்பமாகக் கருதக்கூடாது. வாழ்வு என்பது பெற்றுக் கொண்டே இருப்பது அல்ல. ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலமே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
   படித்தவர்கள் எல்லாம் ஞானம் நிறைந்தவர்கள் என்று கருதிவிட முடியாது. தகவல்களைப் பெற்று சிந்தனை நிறைந்த அறிவாற்றலை தொடர்ந்து வளப்படுத்தி வந்தால் பிறகு ஞானத்தை அடைய முடியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் படிக்காதவர். அவரை மெத்தப் படித்த விவேகானந்தர் குருவாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் ராமகிருஷ்ணரின் ஞானம்தான்.
   தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். உணவு, உறக்கம், உழைப்பு, இன்பம், சிந்தனை ஆகியவற்றில் 
மலைக்கும் மடுவிற்கும் நடுவே நாம் செல்ல வேண்டும். எந்த விலங்கும், பறவையும் 
காலச் சூழலுக்கு ஏற்ப தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுவிடவில்லை. காரணம் அவற்றுக்கு மனிதனைப்போல சிந்தனை அறிவு கிடையாது. 
   எனவே இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டுக் கொண்டு, அறநூல்களில் கூறப்பட்டுள்ளவைகளைக் கடைப்பிடித்து 
ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுவே ஜீவரசமாக சுவையோடு இருக்கும் என்றார் மணியன். 
    இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், பள்ளியின் தாளாளர் ரங்கநாதன்,  நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, மதி, எஸ். சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
'ஓசன் சீல்டு' சென்னை வருகை:

இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளது

ஆஸ்திரேலிய படைத் தளபதி தகவல் 

திருவொற்றியூர், மே 18:ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படைக் கப்பல்  'ஓசன் சீல்டு'  வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. இதனை இந்திய கடலோரக் காவல்படையினர், பள்ளி மாணவர்கள் கூடி வரவேற்றனர். 
    இந்திய கடலோரக் காவல்படையினரும், வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ண உறவுகள் அடிப்படையில் பரஸ்பரம் அந்தந்த நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம். இதன்படி கடந்த 2004-ம் ஆண்டு 
இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் சங்கல்ப் ஆஸ்திரேலியா சென்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை கப்பலான 'ஓசன் சீல்டு' வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. அப்போது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கூடி கப்பலை வரவேற்றனர்.
பின்னர் ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்புப் படை ஆணையர் ரோமன் குவேட்வைலி கப்பல் பயணத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, 
ஆஸ்திரேலியா திறமையான கடல் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தின் மூலம் இந்திய கடலோரக் காவல்படையினருடனான ஈடுபாடு, உறவுகள் அதிகரிக்கும்.  மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இரு நாடுகளிடையே மதிப்பு மிகுந்த நல்லுறவு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை இக்கப்பல் பயணம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். பரந்த கடல் எல்லையைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் போதை மருந்துகள், ஆயுதங்கள், கடற்கொள்ளை, சட்டவிரோத மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார் சட்ட விரோதச் செயல்களைக் கண்காணிப்பதுதான் எல்லை பாதுகாப்பு படையினரின் முக்கிய பணிகளாகும். ஆஸ்திரேலிய கடல் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் மலாக்கா நீரிணைப்பு பகுதியில்தான் இதுபோன்ற பிரச்னைகள் நீடித்து வருகின்றன. 
இலங்கை அகதிகள் பிரச்னை:
    சட்டவிரோதக் கும்பல்கள் மூலம் இலங்கை அகதிகள் பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக படகுகளில் அழைத்து வரப்படுகின்றனர். இதனை ஆஸ்திரேலியா அனுமதிப்பதில்லை. இதனையடுத்து அவ்வாறு வரும் அகதிகள் மீட்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் தொடர்புடைய நாடுகளின் 
தூதரகங்கள் மூலம் அந்தந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கிறோம். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை பல்வேறு வகையில் மனிதாபிமானத்துடன்தான் நடவடிக்கை 
மேற்கொள்கிறோம். ஆனால் சட்டவிரோதக் குடியேற்றத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது என்றார் குவேட்வைலி.
   இந்நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் ஹரிந்தர் சித்து, கப்பலின் கேப்டன் ஆலன் சாம்ப்கின், இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய உதவித் தளபதி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இரு நாள்களும் 
இரு நாட்டு வீர்ர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் 'ஓசன் சீல்டு' 

நாளை சென்னை வருகிறது 

திருவொற்றியூர், மே 16: ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  'ஓசன் சீல்டு' என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைகிறது. இதனை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் வரவேற்கின்றனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 
    இந்திய கடலோரக் காவல்படையினரும் வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ணம் அடிப்படையில் கலந்துரையாடல், தகவல்கள்,  தொழில்நுட்ப பரிமாற்றம், சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கமானது. இந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப்படை கப்பல் ஓசன் சீல்டு வியாழக்கிழமை சென்னை வருகிறது.
நடுக்கடலில் பல்வேறு வகையில் உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல் 110 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும் கொண்டதாகும். மணிக்கு 16 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பல் சுமார் 8,500 டன் எடை கொண்டாகும். மேலும் பொருள்களை எடுத்துச் செல்ல சுமார் 1000 மீட்டர் பரப்பளவிலான இடம் உள்ளது. மேலும் கப்பலின் மேல் பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் தளம் உள்ளது. காணாமல் போன மலேசியா விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பலில் ஓசன் சீல்டும் ஒன்றாகும். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Thursday 27 April 2017

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை கைப்பற்ற
27-வது நாளாகத் தொடரும் முற்றுகை போராட்டம் 

திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 27 நாள்களாக இதே இடத்தில் 
பந்தல்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
     இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய  மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. 
பிரச்னையின் பின்னணி என்ன?
      துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் 
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை 
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து  என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில்  என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு  சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
    என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது, 
   அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ 
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
27 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்: 
    ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர்  எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே கடந்த  27 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ? 
      மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன.  இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
23 நாள்களாகத் தொடரும் போராட்டம்: 

ஆக்கிரமிப்பின் பிடியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம்  

அதிகாரிகள் மெத்தனத்தால் பொதுமக்கள் அதிருப்தி

திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 23 நாள்களாக இதே இடத்தில் 
பந்தல்கள் அமைத்துப் போராடி வருகின்றனர். 
     இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய  மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. 
பிரச்னையின் பின்னணி என்ன?
      துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் 
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை 
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து  என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில்  என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு  சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
    என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது, 
   அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ 
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
23 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்: 
    ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர்  எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே  23 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ? 
      மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன.  இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Monday 17 April 2017

'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

இன்று முதல்வர் பழனிசாமி வருகை 

திருவொற்றியூர், ஏப்.16:முதல் முறையாக சென்னை வந்த 'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை இரு தினங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
   இந்திய கடற்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். சென்னை' என்ற போர்க்கப்பல் தனது முதல் பயணமாக சனிக்கிழமை சென்னை வந்தது. அப்போது சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வரிசையில் நின்று கொடியசைத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்கள்  கப்பலில் ஏறி சுற்றிப் பார்த்தனர். இதனையடுத்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகே கடலில் ஒளி அலங்காரம் செய்யப்பட்டு இக்கப்பல் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 
ஞாயிற்றுக்கிழமை கப்பலை பொதுமக்கள் பார்வையிட கடற்படை அனுமதித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கப்பலை பார்வையிட்டதாகவும், இரு தினங்களில் கப்பலைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை மொத்தம் சுமார் 5 ஆயிரம் என பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில்  கப்பலைப் பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வருகைதர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சிகரமான அனுபவம்: பொதுமக்கள் நெகிழ்ச்சி
கப்பலைச் சுற்றிப்பார்த்தது குறித்து பெருங்களத்தூரைச் சேர்ந்த என்.சங்கர் (35) கூறியது,
   நானும் எனது நண்பர்களும் கப்பலைப் பார்வையிட்டோம். கடற்படை அதிகாரிகள் பேருந்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் கப்பலில் ஏறி முக்கிய பகுதிகளில் பார்வையிட அனுமதித்தனர். சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டோம். எங்களுக்கு கப்பலைப் பார்வையிடுவது இதுதான் முதல்முறையாகும். எனவே மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே இருந்தாலும் பார்வையிடுவது மட்டுமே போதுமானது அல்ல. ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி வைத்து போர்க்கப்பலின் சிறப்பு, கடற்படையினரின் பணிகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் பொதுமக்கள் எங்கே வரவேண்டும், அனுமதியை யார் தருவது என்பதை முன்னதாகவே முறையாக அறிவித்திருந்தால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருந்திருக்காது. மேலும் இது போன்ற கப்பல்கள் வருகை தரும்போது கூடுதல் நாள்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றார் சங்கர்.

தவறான தகவல்கள்தான் சிரமங்களுக்கு காரணம்

ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம் கூறியது, 
   போர்க்கப்பலை வரவேற்க மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்  ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என கடற்படை ஏதும் அறிவிக்கவில்லை. பொதுமக்கள் பார்வையிடத்தான் மெரினா கடற்கரையை ஒட்டி கப்பலை நிறுத்தியது . ஆனால் தவறான தகவல்களின் பேரில் பொதுமக்கள் 18-ம் தேதிவரை கப்பலை நேரில் பார்வையிடலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கானோர் நேப்பியால் பாலம் அருகே கடற்படை அலுவலகம் அருகில் குவிந்துவிட்டனர். இதன்பிறகு வேறு
வழியின்றி பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு கப்பலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். முடிந்த அளவு பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் 
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.  எனவே பொதுமக்களுக்கு இனி அனுமதி இல்லை என்றார் சண்முகம். 
இந்திய கடற்படை போர்க்கப்பல் சென்னை வருகை: பள்ளி மாணவர்கள் வரவேற்பு

முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்

திருவொற்றியூர்,ஏப்.15:இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சென்னை 
சனிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்ததடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கொடியசைத்து வரவேற்றனர். 
   பின்னர் கப்பலின் சிறப்பு, வருகை நோக்கம் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் கூறியது,
   கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.என்.எஸ். சென்னை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.  மும்பையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான மஜகான் ஷிப் யார்டில் கட்டப்பட்ட இக்கப்பலில் இதர போர்க் கப்பல்களில் உள்ளதைப் போன்று ஏவுகணைகள், கண்ணிவெடிகளை அழித்தல், பீரங்கி, ரேடார் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணு, உயிரி, வேதியியல் கருவிகள் பங்களிக்கும் போர்களிலும் இக்கப்பலைப் பயன்படுத்த முடியும். சுமார் 7,500 டன் எடை கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரம் கொண்ட இக்கப்பலில் தற்போது 330 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  முழுக்கமுழுக்க உள்நாட்டுத்தொழில் நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்ட இக்கப்பலில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருவிகள், உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். 
மேலும் 40 கப்பல்கள்:
   கடற்படையின்  மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது நல்லெண்ணப் பயனமாகவே இக்கப்பல் சென்னை வந்துள்ளது. மேலும் இக்கப்பல் சோதனை இயக்கத்தில் இருந்தபோது 2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நிவாணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகம் வந்து சென்றுள்ளது. இந்தியக் கடற்படை தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. பழைய கப்பல்கள் நீக்கப்பட்டு புதிய மற்றும் கூடுதல் கப்பல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் 40 சிறிய, பெரிய ரக அதிநவீன போர்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றனர். 
தமிழக முதல்வர் பார்வையிடுகிறார்:
    துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கப்பலை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை பார்வையிடுகிறார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இக்கப்பலின்  ஒத்திகை நிகழ்ச்சி நடுக்கடலில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். இக்கப்பலைப் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார் அலோக் பட்னாகர்.
     பேட்டியின் போது கப்பலின் கேப்டன் பிரவீன் நாயர், கடற்படை அதிகாரிகள் மகாதேவன், பிரசாந்த் மிஸ்ரா,  பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
      இதனையடுத்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகாமையில் கடலில் ஐ.என்.எஸ். சென்னை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கப்பல் முழுவதும் மிகுந்த ஒளி அலங்காரம் செய்யபட்டிருந்தது. இதனால் மெரினா வந்திருந்த பொதுமக்கள் கூடுதல் அழகுடன் கப்பலைக் கண்டு களித்தனர். 

சென்னை பெயர்க்காரணமும், மஞ்சம்பட்டி காட்டெருமையும்...

    இந்தியாவின் முக்கிய சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்கள், முக்கிய நதிகளின் பெயர்கள் போர் மற்றும் ரோந்துக் கப்பல்களுக்குச் சூட்டப்படுவது வழக்கம். இதில் தற்போது முக்கிய நகரங்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொச்சி, கொல்கத்தா ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக சென்னை மாநகரத்தின் பெயர் இப்போர்க்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையின் பெருமைகள் இக்கப்பலில் பறைசாட்டப்பட்டுள்ளன. இக்கப்பலின் அடையாளச் சின்னத்தில் திருப்பூர், தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் காணப்படும் அரிய வகை காட்டெருமை, சென்னை மாநகர வரைபடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் மஞ்சம்பட்டி காட்டெருமை கட்டுக்கோப்பான உடலமைப்பு, துணிச்சல், போர்க்குணம், குறைந்து வரும் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களும், சென்னை மாநகரத்தின் பெருமைகள் குறித்தும் கப்பலின் பல்வேறு இடங்களிலும், விளக்கக் குறிப்பேட்டிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.